October 22, 2020
தண்டோரா குழு
இந்திய அளவில் முதன் முறையாக கிராமிய கலைக்கென கோவையை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர் ஐக்கிய நாடுகள் சபையின் க்ளோபல் காம்பேக்ட் விருதை பெற்றுள்ளார்
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கலையரசன். சிறு வயதிலேயே மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் கிராமிய புதல்வன் விருது பெற்ற இவர்,அதன் நினைவாகவே கடந்த ஏழு வருடங்களாக கோவை பீளமேடு, சேரன்மாநகர் பகுதியில் கிராமிய புதல்வன் அகாடமி எனும் நாட்டுப்புற கலை பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பறையிசை, கரகாட்டம், ,ஒயிலாட்டம் , பொய்க்கால் குதிரை, கம்பாட்டம், கோலாட்டம், காவடி ஆட்டம்,என பல்வேறு வகையான கிராமிய கலைகளை இலவசமாக கற்று கொடுத்து வருகிறார்.
மேலும் கிராமிய நடன கலைகளையும் கற்று தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலம் மற்றும் பல்வேறு நாடுகளில் கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.இவரது கலை ஆர்வத்திற்கென மத்திய மாநில அரசுகளின் மோடி வாரியர், கலைச்சேவகர்,கிராமிய புதல்வன், கலைகளின் அரசன் என பல்வேறு பட்டங்கள் மற்றும் விருதுகள் வாங்கி குவித்துள்ளார்.
இந்நிலையில் இவரது இந்த கிராமிய கலை சேவையை பாராட்டி ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது பவள விழாவை முன்னிட்டு கலை சேவைக்கென க்ளோபல் காம்பேக்ட் விருதை ஐ.நா இவருக்கு அளித்து பெருமை படுத்தியுள்ளது. .இந்திய அளவில் கிராமிய நாட்டுப்புற கலை பிரிவில் முதன் முறையாக இந்த விருதை பெற்றவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்
இவர்,செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இதுவரை, கிராமிய கலை சம்பந்தமான போட்டிகளில் பங்கேற்று கிராமிய புதல்வன், கிராமிய செல்வன், கலைகளின் செல்வன் என ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளதாகவும்,ஐ.நா.வின் விருதை பெற்றதற்கு தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணிக்கு தமது நன்றிகளை கூறுவதாக தெரிவித்த அவர்,நமது மண்சார்ந்த இந்த கிராமிய கலைகளை இளம் தலைமுறையினர் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும்,மேலும் கிராமிய கலைகள் குறித்து பள்ளி மாணவர்களும் தெரிந்து கொள்ளும் விதமாக தமிழக அரசு பள்ளிகளில் கிராமிய நாட்டுப்புற கலைகளுக்கான பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.