October 21, 2020
தண்டோரா குழு
அரியர் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகளை வழங்கு அல்லது தேர்வுகளை நடத்து என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து நூதன முறையில் தேர்வு எழுதி SFI அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் covid-19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு இறுதியாண்டு பயிலும் அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என ஒரு அரசாணை வெளியிட்டது. மேலும் இறுதி ஆண்டு பருவ தேர்வுகளை இணைய வழியில் நடத்தியது. இந்த நிலையில் தற்பொழுது யுஜிசி இதற்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தினால் அரியர் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது உயர்கல்வி மேற்படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் அனைத்து விதமான உயர்கல்வி மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்து விடும்.இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு SFI மாணவர் அமைப்பினர் அரியர் மாணவர்களின் நலன்களைக் காக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு உடனடியாக அரியர் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகளை அறிவிக்க வேண்டும் அல்லது இணையவழியில் தேர்வுகளை நடத்தி தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். அதுவரை உயர்கல்வி மேற்படிப்புக்கான கலந்தாய்வை நடத்த கூடாது இதனால் அரியர் மாணவர்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் அவர்களின் கல்வி கேள்விக்குறியாகி விடும் எனவே உடனடியாக தமிழக அரசு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து தரையில் அமர்ந்து வெள்ளைக் காகிதத்தில் அரியர் தேர்வுகளை எழுவதுபோல் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.