May 21, 2020
தண்டோரா குழு
கோவையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் ஓரம் இருந்த மரம் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதிகள் ராஜா மற்றும் காயத்ரி(38). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் குழந்தைகளுக்கு பொருள் வாங்குவதற்காக கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது.இந்த சூழலில் ராஜா மற்றும் காயத்ரி ஆகிய இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அவர்களது வாகனம் லட்சுமி மில் ஜங்ஷன் அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு சாலையோரம் இருந்த மரம் ஒன்று முறிந்து இவர்கள் மீது விழுந்தது. இதில் காயத்ரி படுகாயம் அடைந்தார். கணவர் ராஜா தலைக்கவசம் அணிந்திருந்ததால் லேசான காயங்களுடன் தப்பினார். இதைத்தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் காயத்ரியை மீட்டு அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் தலையில் பலத்த காயம் அடைந்ததால் ரத்தம் அதிக அளவில் வெளியேறியதில் காயத்ரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பந்தயசாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.