May 14, 2020
தண்டோரா குழு
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2 மாதங்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,
12 ஆயிரம் சுய உதவி குழு மூலம் 3 கோடி மாஸ்க், 1.2 லட்சம் லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற ஏழைகளுக்கு உதவ, புதிதாக 7,200 சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நகர் புறங்களில் வீடற்றவர்கள் தங்க வைக்கும் முகாம்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு 3 வேலை உணவு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு முகாம் அமைக்கவும், உணவு வழங்கவும், மாநிலங்களுக்கு ரூ.11,002 கோடி வழங்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 4,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு-தானிய உதவி தேவைப்படுகிறது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்துக்கு நபருக்கு 5 கிலோ தானியம், ஒரு குடும்பத்துக்கு 1 கிலோ பருப்பு என 2 மாதங்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம், 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக 2 மாதங்களுக்கு ரூ. 3,500 கோடி செலவிடப்படும். இந்த மொத்த தொகையையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். இதைச் செயல்படுத்துவதும், புலம்பெயர் தொழிலாளர்களைக் கண்டறிவதும், முழுமையாக விநியோகிக்கப்படுவதும் மாநில அரசுகளின் பொறுப்பாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.