• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சாதி சான்றிதழ் இல்லாததால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பழங்குடி மாணவி

May 14, 2020 தண்டோரா குழு

கோவையில் சாதி சான்றிதழ் இல்லாததால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பழங்குடி மாணவி ஒருவர் பரிதவித்து வருகிறார்.

மழையில் ஒழுகும் ஓலைக் குடிசைகள். பாதியில் நிற்கும் பசுமை வீடுகள். மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை. படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள். இது ஏதோ அடர் வனத்திற்குள்ளோ, மலைகளில் வாழும் பழங்குடிகளின் நிலையில்லை. கோவை மாவட்டம் திருமலையம்பாளையம் பேரூராட்சியில் உள்ள ரொட்டி கவுண்டன்புதூர் பகுதியில் சமவெளிப் பகுதியில் வாழும் மலசர் பழங்குடி நிலை. காடு, மலைகளில் வாழும் பழங்குடிகளுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள் கூட சமவெளியில் வசிக்கும் இவர்களுக்கு கிடைக்கவில்லை.இங்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் இப்பழங்குடிகளுக்கு, சுற்றுவட்டார விவசாய தோட்டங்களில் உள்ள கூலி வேலை வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. குறுகிய ஓலைக்குடிசையில் பொருட்களை அடைத்து வைத்து, குடும்பம் நடத்துவதே பெரும்பாடாக உள்ளது. மழைக்காலத்தில் இவர்களின் சிரமங்களை சொல்லி மாளாது. சிலருக்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்பட்டாலும், எல்லாம் பாதியில் நிற்கிறது. 6 இலட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பறையும் பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது. மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளும் இன்னும் வந்து சேரவில்லை. இரவு மட்டுமல்ல பகலும் தங்களுக்கு இருட்டாகவே உள்ளதாக பழங்குடிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அடிப்படை வசதிகளை போலவே அரசின் அடையாள அட்டைகள் கிடைக்காத நிலையில் அடையாளம் அற்றவர்களாக வாழ்கின்றனர். பலருக்கும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவை இல்லாததால் அரசின் சலுகைகளை பெற முடியாத நிலை உள்ளது. பள்ளி செல்லும் இப்பகுதி மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் கல்வியை தொடர தடையாக உள்ளது. பழங்குடி சாதி சான்றிதழ் பெறுவது சிரமமாக இருப்பதாகவும், இதனால் இடை நிற்றல்கள் அதிகமாக உள்ளதாக அப்பழங்குடிகள் தெரிவித்தனர்.

இந்த சூழலில் அக்கிராமத்தை சேர்ந்த முனியப்பன் வசந்தாமணி தம்பதியின் 19 வயது மகள் சங்கவி இந்த தடைகளை எல்லாம் தாண்டி பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். சிறு வயது முதல் மருத்துவராக வேண்டுமென்ற இலட்சியத்தோடு படித்த சங்கவிக்கு, சாதி சான்றிதழ் தடையாக உள்ளது. இதனால் தனியார் கல்லூரியில் சேர்ந்த அவர், சில மாதங்களில் படிப்பை பாதியில் கைவிட்டார். சில நாட்களுக்கு முன்பு சங்கவி தந்தை மரணமடைய, அக்குடும்பம் நிலை குலைந்து போயுள்ளது. பலமுறை சாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்தும், தனக்கு இதுவரை சாதி சான்றிதழ் கிடைக்காததால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை என சங்கவி தெரிவித்தார். சாதி சான்றிதழும், உதவிக்கரமும் கிடைத்தால் நீட் தேர்விற்கு தயாராகி மருத்துவ கனவை நனவாக்க முடியுமென அவர் கூறினார்.

கிராமத்திலுள்ள அனைத்து மாணவர்களும் பாதிக்கபடுவதால் அனைவருக்கும் சாதி சான்றிதழ் வழங்கவும், அடிப்படை வசதிகளை செய்து தரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது அப்பழங்குடிகளின் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில், குடும்ப அட்டை,சாதி சான்றிதழ் மின்சாரம் இல்லாமல் சிரமப்படும் ரொட்டிகவுண்டனூர் முனியப்பன் கோவில் வீதி மலைவாழ் மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தற்போது ஆதார் மற்றும் குடும்ப அட்டை தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மதுக்கரை உணவு வழங்கல் துணை தாசில்தார் கருணாநிதி குடும்ப அட்டை தொடர்பான தகவல்களை மக்களிடம் பெற்று வருகிறார். அதே போல திருமலையாம்பாளையம் பேரூராட்சி பொறியாளர் சாலை அமைப்பதற்காக சாலையை அளந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தெருக்குழாய் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
மாவட்ட ஆட்சியர் கு ராசாமணியின் உத்திரவின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க