May 11, 2020
தண்டோரா குழு
மே 31 வரை ரெயில், விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது என முதலமைச்சர் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.இதனால் தற்போது மூன்றாம்கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கிடையில்,ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு 5-வது முறையாக, அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக்கூட்டத்தில் ஈடுபட்டார்.இந்தக் கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமைச்செயலாளர் சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இக்கூட்டத்தின் போது
தமிழக முதல்வர் பழனிச்சாமி,
மருந்து, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க தற்காலிக நிதியாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும். மே 31 ஆம் தேதி வரை சென்னைக்கு ரெயில், விமான சேவைகளை தொடங்க வேண்டாம். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுவோருக்கு ரொக்கமாக ஊதியம் வழங்க வேண்டும்.
நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும். அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கூடுதல் தானியங்களை இலவசமாக தர வேண்டும்’என்று பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.