April 3, 2020
தண்டோரா குழு
கொரோனா கிருமியின் தொற்றுதல் சர்வதேச அளவில் மக்களைப் பல்வேறு வழிகளில் பெருமளவில் பாதித்துள்ளது. இயற்கைப் பேரிடர்களால் பாதிப்புறும் மக்களுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டு குமரகுரு நிறுவனங்களின், குமரகுரு மீட்பு மற்றும் சமூக மேம்பாட்டு மையம் (KARE) 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது பல்வேறு இயற்கைப் பேரிடர்களின் போது மக்களின் துயர்நீக்கத் திட்டமிடுவதிலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், தீவிரமாக செயல்பட்டு மக்களின் இயல்பு மற்றும் உற்பத்தி வாழ்க்கையின் மறுமலர்ச்சிக்கு ஆதரவு அளித்து வந்துள்ளது.
KARE அமைப்பின் களப்பணி ஆற்றும் குழு, பேரிடர்களின் மூலம் மாறும் நிலைமைகளின் உண்மை நிலவரங்களைப் புரிந்து கொண்டு, அவ்விடத்திற்குரிய தற்காலிக நிவாரணத்தையும் வழங்குகின்றது. சமூக மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு பாதிப்பு அடைந்தவர்களுக்கு விரிவான மறுவாழ்வு தீர்வுகளை வழங்குகின்றது.
இந்நிலையில், கொரோனா கிருமித் தொற்றினால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான நிலையில் மக்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் COVID – 19 குழுவினை இந்த KARE அமைப்பு ஒருங்கிணைத்துள்ளது. இக்குழுவினர் குமரகுரு நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட உணவு, கைகளைச் சுத்தம் செய்யும் திரவக் கிருமிநாசினி மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றை உள்ளூர் அரசு நிர்வாகத்திற்கும், துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மீட்புக் குழுவினருக்கும் வழங்கி ஆதரவளித்து வருகின்றது.
குமரகுருவின் KARE அமைப்பு இன்றைய சூழலில் தற்போது வரை கோவை சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, வெள்ளக்கிணறு, கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் 3735 உணவுப் பொட்டலங்கள், 2500 முகக் கவசங்கள், 1200 கைகளைச் சுத்தம் செய்யும் திரவக் கிருமிநாசினி குப்பிகள், 500 கிலோ அரிசி ஆகியவற்றை வழங்கி உள்ளது.
உலகில் பரவிவரும் கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக, நிலவிவரும் ஊரடங்கை கருத்தில் கொண்டு, குமரகுரு நிறுவனமானது குடிபெயர்ந்து கல்லூரில் வேலை செய்து வரும் 100கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு உணவு மற்றும் பாதுகாப்பான உறைவிடம் வழங்கியும், மேலும் சமூக இடைவெளி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியும், அதனைப் பின்பற்றுமாறும் வலியுறுத்துகிறது.