April 1, 2020
தண்டோரா குழு
கோவை அன்னூர் புளியம்பட்டியை பகுதியை சேர்ந்தவர் மாஸ்டர் ஜக்குபாய். திருமண விழாக்களில் மூலிகை டீ ஆர்டர் எடுத்து விநியோகம் தொழில் செய்து வருகின்றார்.144 தடை உத்திரவு காரணமாக திருமணங்கள்,பொது நிகழ்வுகள் என எதுவும் இல்லாத நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக பணியாற்றும் அரசு ஊழியர்கள், காவலர்கள் என அனைவருக்கும் இலவசமாக மூலிகை டீ வழங்கி வருகின்றார் ஜக்குபாய்.
அன்னூரில் இருந்து தினமும் காலை 2000 பேருக்கான மூலிகை டீ யுடன் தனது காரில் கிளம்பி வரும் மாஸ்டர் ஜக்குபாய் வழியில் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள்,அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் மூலிகை டீ வழங்கி வருகின்றார்.இந்த மூலிகை டீ தயாரிக்க தினமும் 5000 ரூபாய் செலவாகின்றது எனவும் இந்த டீ யில் கோவக்காய், நெல்லிக்காய், மாங்காய்,சுக்கு, மிளகு,திப்பிலி என மொத்தம் 82 விதமான பொருட்கள் சேர்க்கப்படுவதாகவும் சொந்த விருப்பத்தின் பேரில் இதனை கொடுத்து வருவதாக தெரிவித்த அவர் இது மக்களுக்கு புத்துணர்வை கொடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலுக்கு கொடுக்கும் எனவும் இரவு பகலாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு இது தெம்பளிக்கும் என மாஸ்டர் ஜக்குபாய் தெரிவிக்கின்றார்.
எதையும் எதிர்பார்த்து இதனை செய்யவில்லை எனவும் ஏற்கனவே தன்னிடம் உள்ள பொருட்களை கொண்டு தினமும் இதனை கொடுத்து வருவதாக கூறிய அவர் வரும் 13 தேதி வரை கொடுக்க உள்ளதாக தெரிவித்தார். கடைகள் இல்லாத இந்த நேரத்தில் தங்களால் முடிந்த ஒரு சிறு உதவியை செய்வதால் டீயை அருந்துபவர்கள் தங்களை மனமார பாராட்டுவதாக தெரிவித்தார்.