March 30, 2020
தண்டோரா குழு
இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனாளர்கள் 15 விநாடிகளுக்கு மட்டுமே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்க முடியும்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழல் உள்ளது. இதனால் வேறு வழியின்றி பெரும்பான்மையான நேரத்தை மக்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில்தான் செலவழிக்கின்றனர்.
இதற்கிடையில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாடு 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம். இணைய தேவை அதிகப்படியாக பயன்படுத்தப்படுவதால் பல டெக் நிறுவனங்களும் வீடியோ தரத்தைக் குறைப்பதாக அறிவித்தன. இந்நிலையில், ஃபேஸ்புக், நெட்ஃப்ளிக்ஸ், இன்ஸ்டாகிராம் என அத்தனைத் தளங்களிலும் ஹெச்டி வீடியோ தரம் நிறுத்தப்பட்டது. தற்போது வாட்ஸ்அப் செயலியிலும் 30 விநாடிகளுக்கு என இருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வசதி தற்போது 15 விநாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம் நீங்கிய பின்னர் நிச்சயமாக 30 விநாடிகள் முறை அமல்படுத்தப்படும் என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.