March 23, 2020
தண்டோரா குழு
சீனாவின் ஹுபே மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 3,36,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14,613 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன. ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையில், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து நகைக்கடைகளும் மூடப்படும் என்று சென்னை நகைக்கடைகள் வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயந்திலால் சலானி அறிவித்துள்ளார்.