March 17, 2020
தண்டோரா குழு
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவருக்கு கொரோனா அறிகுறி பரிசோதனையில் நெகட்டிவ் என அறிக்கை வெளிவந்ததும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு தீவிரமாக சுகாதார பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல விமானம் மூலம் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் தாய்லாந்திலிருந்து பள்ளிவாசல்களை சுற்றிப்பார்க்க கடந்த வாரம் சென்னைக்கு ஏழு பேர் கொண்ட குழுவினர் வந்தனர். பின்னர் பள்ளிவாசல்களை சுற்றிப் பார்த்த அவர்கள் ஈரோடு சென்றனர்.
இதைத்தொடர்ந்து அந்த ஏழு பேரில் ஒருவரான நாற்பது வயது மதிக்கத்தக்கவருக்கு காய்ச்சலுடன் சளி,இருமல் பாதிப்புகள் ஏற்பட்டது. பின்னர் அவரை தாய்லாந்துக்கு அனுப்ப முற்பட்டபோது விமானநிலையத்தில் நடைபெற்ற சோதனையில் கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த பயணியை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. அந்த முடிவில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து சிறுநீரகம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இவரது மரணம் குறித்து தாய்லாந்து தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லண்டன் சென்று திரும்பிய கோவையை சேர்ந்த வாலிபர் கொரொன வார்டில் இன்று காலை அரசு மருத்துவமனையில் பணி அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.