March 16, 2020
தண்டோரா குழு
கொரோனா வைரஸ் பாதிப்பால் கிருமி நாசினிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குத் தேவையான கிருமி நாசினியை மருத்துவமனை நிர்வாகமே தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள அடிக்கடி காய் கழுவுதல், முகக்கவசம் அணிந்துகொள்ளுதல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கிருமி நாசினியின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வெளிசந்தையில் கிருமி நாசினியை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், மருத்துவர்களுக்கு தேவையான கிருமி நாசினியை வெளியில் வாங்கிப் பயன்படுத்தினால் கட்டுபடியாகாது நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், நோயாளிகளுக்குத் தேவையான கிருமி நாசினியை மருத்துவமனை நிர்வாகமே தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அசோகன் கூறுகையில்,
நாள் ஒன்றுக்கு கிருமி நாசினிக்கு மட்டும் 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்படுவதாகவும், கிருமி நாசினி தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருள்கள் மருத்துவக்கல்லூரியின் நோயியல் துறையில் இருப்பதால் மருந்தியல் துறை மருத்துவர்கள், மாணவர்கள் மூலம் கிருமி நாசினி தயாரிக்கப்படுவதாக டீன் அசோகன் தெரிவித்துள்ளார். தினமும் 10 லிட்டர் கிருமி நாசினி தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எவ்வித நிறமிகளும் சேர்க்காமல் உரிய மூலப்பொருள்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகிறது. அனைத்து வார்டுகளிலும் பத்து படுக்கைகளை ஒரு இடத்தில் கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளை பரிசோதிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஒவ்வொரு முறையும் கிருமி நாசினியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியில் சென்றுவரும் நோயாளிகளும் கட்டாயம் கிருமி நாசினியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.