March 12, 2020
தண்டோரா குழு
இந்து பிரமுகர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க தவறிய காவல்துறையை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்ற பேரணி கோவையில் நடைபெற்றது.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ஆனந்த் என்பவர் மர்மநபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து ஆர். எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த சூர்யபிரகாஷ் என்பவரும் புதன்கிழமை அன்று மர்மநபர்களால் தாக்கப்பட்டார். இச்சம்பவங்களால் கோவையில் பதட்டம் நிலவியது. இந்நிலையில், இந்து பிரமுகர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் அதனை தடுக்க தவறிய காவல் துறையை கண்டித்தும் இந்து முன்னணி தலைமையிலான பல்வேறு அமைப்பினர் அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை 1000″த்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர்.
இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா.சுப்ரமணியம், பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பா.ஜ.க மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார்,இந்து முன்னணி மாவட்ட தலைவர் தசரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா.சுப்ரமணியம்,
கோவையில் கலவரத்தை ஏற்படுத்தவே சிலர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் இந்து பிரமுகர்கள் மீதான தாக்குதல் நிகழ்வுகளை காவல்துறை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என்றும் கோவையின் அமைதி காக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.