March 11, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர் நியமனத்தில் முறைகேட்டை கண்டித்து, தற்காலிக துப்புரவு பணியாளர்கள் மூன்றாவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் பணிக்கு 321 பேர்களுக்கு பணி நியமன ஆணையை உள்ளாட்சித் துறை அமைச்சர்
எஸ்.பி.வேலுமணி வழங்கினார். முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கும் துப்புரவு பணி நியமனம் வழங்கப்பட்டது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாற்றும் நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்படாததை கண்டித்து, தற்காலிக துப்புரவு பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
மேலும் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை மாநகராட்சியில் 10 ஆண்டுகளாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவதாகவும், அனுபவம் இல்லாதவர்களிடம் 5 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு பணி வழங்கப்பட்டு இருப்பதாகவும், இப்பிரச்சனைக்கு அரசு அதிகாரிகளே காரணம் என்று தெரிவித்தனர்.மேலும் இப்போராட்டத்திற்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காணவில்லை என்றால் இந்த போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.