February 5, 2020
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
கோவை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி என்பவரது மகன் சிவ பெருமாள் (35). கட்டிட தொழிலாளி. இவரது காமாட்சி. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிவ பெருமாள் தனது வீட்டின் அருகில் உள்ள சமுதாய கூட்டத்தின் மேற்கூரையில் நின்றபடி கட்டுமானப்பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில்,சிவ பெருமாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக அவர் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு அவரை பரிசோதித்த போது மூளைச்சாவு அடைந்திருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர். தொடர்ந்து சிவ பெருமாளின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்களை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். தொடர்ந்து ,கோவை அரசு மருத்துவமனையில் முதன் முறையாக உடல் உறுப்பு தானம் பெறப்பட்டது.
அங்கு, சிவ பெருமாளின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டன.தொடர்ந்து அவரது கல்லீரல் கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சேலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கும், மற்றொரு சிறுநீரகம் கோவை அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் சிவ பெருமாள் 3 பேருக்கு மறு வாழ்வு அளிக்க உள்ளார்.மேலும், இவரது கண்கள் தானமாக பெறவும் மருத்துவமனை நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது.