• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பினால் 184 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

October 14, 2019 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பினால் மொத்தம் 184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இதையடுத்து சுகாதாரத்துறை தனது பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலம் காய்ச்சல்கள் பரவுவதை தடுத்தது. அதேபோல காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது. இப்படி நடைபெற்ற தொடர் கண்காணிப்புகளால் நோய் பாதிப்புகளும் குறைந்தது.ஆனால் தற்போது தமிழகத்தில், தென்மேற்குப் பருவமழையை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கொசுக்களால் பரவும் டெங்கு,மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு என்று பிரத்தியேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற வருபவர்களுக்கும் 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக்கும் வகையில் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பினால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவிடுகிறது. கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி டெங்கு காய்ச்சல் பாதிப்பில் 14 பேர் அனுமதிக்கபட்டனர். அதேபோல காய்ச்சல் பாதிப்பினால் 94 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்படியிருக்க தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 5 சிறுவர்கள் உள்பட 32 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல வைரஸ் காய்ச்சல் பாதிப்பிற்கு 28 சிறுவர்கள் உட்பட 152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கடந்த ஒன்பதாம் தேதி வந்த தகவலின்படி டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் 108 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , தற்போது 184 பேர் சிகிச்சை பெற்று வருவது பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல காய்ச்சல் பரவுவதை தடுக்க மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் அனுமதிக்கப்படுபவர்களின் தகவல்கள் முறையாக அரசிடம் கொண்டு செல்லபடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் அனுமதிக்கப்படும் பகுதிகளை கண்காணிக்க முடிவதில்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க