• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கனமழை காரணமாக கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு

August 8, 2019 தண்டோரா குழு

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை சிறுவாணி அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது .மேலும் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கன மழை பெய்து வரும் சூழலில் அணை வேகமாக நிரம்பி வருகிறது. சுமார் 50 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 34 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. நேற்றைய தினம் 28 அடியாக இருந்த நீரின் அளவு ஒரே நாளில் ஆறடி உயர்ந்து இன்று 34 அடியை எட்டியுள்ளது.

மேலும் சிறுவாணி அணை பகுதிகளில் விடாது கனமழை பெய்து வருவதால் இரண்டு அல்லது மூன்று தினங்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே கோவையிலிருந்து சிறுவாணி அணைக்கு செல்லும் சாலை மண்சரிவு ஏற்பட்டு சேதமடைந்துள்ளதால் அணையை ஆய்வு செய்யும் தமிழக அதிகாரிகள் கேரள மாநிலம் பாலக்காடு வழியாகவே சிறுவாணி அணைக்கு செல்ல முடியும் எனவும் ஆனால் பாலக்காடு வழியாக கேரள பொதுப்பணித் துறையினர் தமிழக அதிகாரிகளை அனுமதிக்க மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாடிவயல் பகுதியில் துவங்கும் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கின் காரணமாக கடந்த பல மாதங்களாக வரண்டு கிடந்த பேரூர் படித்துறையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பேரூர் பகுதியில் உள்ள தற்காலிக தரைப்பாலம் வெள்ளப் பெருக்கால் சேதமடைந்து அடித்து சென்றுள்ளதால் பேரூர் -வடவள்ளி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று பிற்பகல் முதல் கோவையில் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருவதால் நீர்நிலைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க