August 6, 2019
தண்டோரா குழு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள போக்குவரத்து சட்ட திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200 கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசு போக்குவரத்து சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும்,மாநில அரசு மீட்டர் கட்டண உயர்வை உடனடியாக அமல்படுத்திட வேண்டும் என அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகுமாரன் பேசுகையில்,
2 முறை போக்குவரத்து சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற முயன்று போக்குவரத்து தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக நிறுத்தி வைக்கபட்டது. தற்போது பெருபான்மையுடன் பா.ஜ.க அரசு வெற்றி பெற்ற காரணத்தினால் சட்ட திருத்த மசோதவை அமல்படுத்தி உள்ளது. இது போக்குவரத்து தொழிலாளர்களை கார்பரேட் முதலாளிகளிடம் அடமானம் வைப்பது போல என தெரிவித்தார். மேலும் தினமும் 200,300 ரூபாய் வருமானம் ஈட்டவே சிரமமாக உள்ள நிலையில் மத்திய அரசின் இந்த சட்ட திருத்த மசோதா தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிப்பதாக இருப்பதாக தெரிவித்தார். மாநில அரசும் ஆட்டோ கட்டணத்தை முறைபடுத்தாமல் கால தாமதம் செய்து வருவதாக கூறியவர் முறையான கட்டணத்தை உடனடியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கட்டண முறை மாற்றி அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல் படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 3 லட்சம் ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளதாகவே சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறாவிட்டால் ஆட்டோ தொழிலாளர்களை ஒருங்கிணைத்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்போது தெரிவித்தார்.