June 21, 2019
தண்டோரா குழு
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த கோவையை சேர்ந்த விமானபடை வீரர் வினோத்தின் உடல் 33 குண்டுகள் முழங்க விமான படை வீரர்களின் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் விமனப்படைத்தளத்திலிருந்து கடந்த 3 ம் தேதி புறப்பட்ட இந்திய விமான படைக்கு சொந்தமான ஏ.என். 32 ரக விமானம் 13 விமானபடை வீரர்களுடன் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சியாங் மலைப்பகுதியில் விபத்திற்குள்ளானது.
இந்நிலையில் நீண்ட தேடுதல் பணிக்கு பின்னர் 13 பேரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பபட்டது.இந்த விமான விபத்தில் உயிரிழத்த கோவையை சேர்ந்த வினோத் ஹரிஹரன் என்பவரின் உடல் ராணுவ விமானம் மூலம் கோவை சூலூர் விமான படைத்தளத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டு விமானப்படை அதிகாரிகளால் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர், சிங்காநல்லூரில் உள்ள வினோத்தின் இல்லத்திற்கு ராணுவ வாகனம் மூலம் உடல் கொண்டு செல்லப்பட்டது. இராணுவ வாகனத்தில் கொண்டு வரப்பட்ட விமான படை வீரர் வினோத்தின் உடலுக்கு தேசிய மாணவர் படை வீரர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து விமான படை வீரர்கள் வினோத்தின் உடலை அவரது இல்லத்திற்கு தூக்கி சென்றனர். உறவினர்கள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட அவரது உடல் சிங்காநல்லூர் பகுதியிலுள்ள மின்மயானத்திற்கு பிற்பகல் 12 மணி அளவில் கொண்டு வரப்பட்டது. தமிழக காவல் துறை சார்பில் கோவை மாநகர துணை ஆணையர் பாலாஜி சரவணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதே போன்று இராணுவ அதிகாரிகளும், விமானப்படை அதிகாரிகளும்,சக வீரர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதனைதொடர்ந்து மின் மயானத்தில் விமான படை வீரர்கள் 33 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு இராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலியானது செலுத்தப்பட்டது. விமான படை வீரர் வினோத்தின் உடல் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதிசடங்குகளை விமான படை வீரர் வினோத்தின் சகோதரரான பாஞ்சாப் மாநிலத்தில் இந்திய விமானப்படையின் ஸ்குவாட்ரன் லீடராக பணியாற்றும் விவேக் செய்தார்.