June 10, 2019
தண்டோரா குழு
கோவையில் கர்ப்பபை அறுவை சிகிச்சையின் போது, வயிற்றில் துணியை வைத்து தைத்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
கோவை பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி. தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னிசியனாக பணியாற்றி வரும் இவர், தனது கணவர் கணேசனுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் தனக்கு கர்ப்பபை பிரச்சணை இருந்ததால், கடந்த 2018 ம் ஆண்டு அக்டோபர் மாதம் புலியகுளம் பகுதியில் உள்ள ஜெனிசிஸ் ராயல் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.கர்ப்பபை அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் துணியை வைத்து அம்மருத்துவனை மருத்துவர் சந்திரகலா தைத்து விட்டதாகவும், 4 மாதங்களுக்கு பின்னரே வயிற்றில் துணி இருப்பது தெரியவந்த பின்னர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் துணியை அகற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மலக்குடல் அரித்து சீழ் பிடித்து ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக மருத்துவமனைக்கு சென்று கேட்ட போது தகாத வார்த்தைகளில் பேசி வெளியே அனுப்பி விட்டதாகவும், கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சந்திரகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.
அம்மருத்துவமனையில் அஜாக்கிரதை காரணமாக குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கடந்த வாரம் தம்பதி மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் மீண்டும் அதே மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும், மருத்துவர் மீதும் மேலும் ஒரு புகார் வந்துள்ளது.