December 14, 2018
தண்டோரா குழு
அதிமுக முன்னாள் அமைச்சரும், அமமுக நிர்வாகியுமான செந்தில் பாலாஜி இன்று மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில் பாலாஜி திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். 2006 ஆம் ஆண்டு கரூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2011-16 வரை ஜெயலலிதா தலைமையிலான அரசில் 2011 முதல் 2015 வரை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டு அமைச்சர் பொறுப்பில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார்.
பின்னர் 2016 இல் அரவக்குறிச்சி தொகுதியில் எம்.எல்.ஏ ஆனார்.ஜெயலலிதா மறைவிற்கு பின், எடப்பாடி அணியில் இருந்த செந்தில் பாலாஜி பின்னர் பிரிந்து தினகரன் அணியில் செயல்பட்டு வந்தார். இதனால் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி உள்பட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், செந்தில் பாலாஜிக்கும் டிடிவி தினகரனுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். . 18 ஆண்டுகளுக்கு பின் திமுகவில் இருந்து விலகி சென்ற செந்தில் பாலாஜி இன்று மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.
பின்னர், திமுகவில் இணைவதற்கான உறுப்பினர் பதிவேட்டில் செந்தில்பாலாஜி கையெழுத்திட்டார். கரூரில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் இருந்தும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோரும் திமுகவில் இணைந்தனர்.