December 13, 2018
தண்டோரா குழு
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேன பிறப்பித்த உத்தரவு செல்லாது இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு, புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த சூழலில் அதிபர் சிறிசேனா, திடீரென்று பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.ஆனால், அதிபர் சிறிசேனாவின் உத்தரவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. பொதுத்தேர்தல் அறிவிப்புக்கும் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். எனினும் அந்நாட்டில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம் ராஜபக்சே பிரதமராக செயல்படவும், அமைச்சரவை கூட்டம் நடத்தவும் இடைக்கால தடை விதித்தது. மேலும், ராஜபக்சேவும், அவரால் அமைச்சராக நியமிக்கப்பட்டவர்களும், டிச., 12ம் தேதி ஆஜராகவும் நீதிமன்றம் உத்திரவிட்டிருந்தது.
இதற்கிடையில், இலங்கை நாடாளுமன்றத்தைக் கூட்டி, ரணில் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, புதனன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் வெற்றி பெற்றுள்ளார். இது அந்நாட்டு அதிபர் சிறீசேனாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ,இலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 13 அமைப்புகள் தொடந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் வியாழன்று ஒருமித்த தீர்ப்பு வழங்கினார். அதில்,
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேன பிறப்பித்த உத்தரவு செல்லாது இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.மேலும், சிறிசேன பிறப்பித்த உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.