December 8, 2018
தண்டோரா குழு
கோயில்களில் தானே தியானம், யோகா செய்ய முடியும். அதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
உலகப் பிரசித்திபெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் “விஞ்ஞான பைரவ” என்ற பெயரில் இரண்டு தினங்கள் தியானம் மற்றும் யோகா நிகழ்ச்சிகளை நடத்துவதாக இருந்தது. அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கிறார். இதற்காக கோயில் வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சி நடத்துவதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி வெங்கட் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அம்மனுவில், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதித்தால் கோயிலின் பாரம்பரியம் கெட்டுப்போகும். இந்த நிகழ்ச்சியால் கஜா நிவாரண பணிகள் பாதிக்கும். பாரம்பரிய தொல்லியல் பகுதியான தஞ்சை பெரிய கோயில் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். எனவே, தஞ்சை பெரிய கோயிலில் வாழும்கலை அமைப்பின் தியான நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும். அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதையடுத்து, இந்த மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அவசர வழக்காக நேற்று விசாரித்தனர். நீதிபதிகள், ஏற்கனவே ஒருமுறை கும்பாபிஷேகம் நடந்தபோது தீவிபத்து ஏற்பட்டது. இங்குதான் நடத்த வேண்டுமா? வேறு இடமே இல்லையா? இங்கு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க முடியாது. நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. இங்கு எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை. நிகழ்ச்சி தொடர்பான எந்த பொருட்களும் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து தஞ்சை கலெக்டர், எஸ்பி, தொல்லியல் துறையினர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். ஏதேனும் மீறியிருந்தால் இந்த நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பிக்கும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், இதுக்குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்,
மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆச்சரியத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது. கோயில்களில் தான் தியானம் மற்றும் யோகா நிகழ்ச்சிகளை நடத்த முடியும். எங்கள் நிகழ்ச்சி நடத்த முறையாக அனுமதி வாங்கினோம். ஆனால் கோயில்களில் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு உள்நோக்கம் ஏதாவது இருக்கும் எனத் தோன்றுகிறது. நீதிமன்ற அனுமதியுடன் தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் தியான நிகழ்ச்சி நடத்துவோம் எனக் கூறியுள்ளார்.