November 27, 2018
தண்டோரா குழு
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையான பாதிப்பு நேரிட்டுள்ளது என மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.
‘கஜா’ புயல் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.புயலால் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.உயிர் சேதமும்,பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது.இதையடுத்து,தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு சீரமைப்பு பணிக்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் முதல்கட்டமாக ரூ. 1500 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தது.மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு பணியை மேற்கொண்டது.மூன்று நாட்கள் ஆய்வு செய்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்தியக் குழுவினர் முதல்வரை சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டேனியல்,
“கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்தோம்.தென்னை,வாழை உள்ளிட்ட மரங்களின் சேதங்களை நேரில் பார்த்தோம்.கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையான பாதிப்பு நேரிட்டுள்ளது.மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தமிழக அரசின் பணிகள் சிறப்பாக உள்ளன. பாராட்டத்தக்கதாக உள்ளன.கஜா புயலால் வாழை,தென்னை உள்ளிட்ட மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.புயல் பாதித்த திண்டுக்கல் மாவட்டத்திற்கு செல்ல இயலவில்லை. விவசாயிகளை போன்று மீனவர்களும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.படகுகள்,வீடுகள் தேசம் அடைந்துள்ளது.அவர்களுடைய வலியை நேரில் அறிந்தோம்.பாதிப்பு தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும்”.இவ்வாறு அவர் கூறினார்.