November 7, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் தீபாவளியன்று,நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று (நவம்பர்6) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.எனினும் இம்முறை தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்க நேரத்தை நிர்ணயித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும்,இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசும் தெரிவித்திருந்தது.
மேலும்,இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில்,தமிழகத்தின் பல பகுதிகளில் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.தமிழகம் முழுவதும் 1500 பேர் மீது சுமார் 622 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகபட்சமாக சென்னையில் 343 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அதே போல்,கோவையில் 184 பேர் மீதும்,விழுப்புரத்தில் 160 பேர் மீதும்,மதுரையில் 109 பேர் மீதும்,திருவள்ளூரில் 105 பேர் மீதும்,சேலத்தில் 100 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.