October 22, 2018 
தண்டோரா குழு
                                உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். 
புதுக்கோட்டையில்  விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா, நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசினார்.எச் ராஜா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.எனினும் அந்த வீடியோவில் பேசியுள்ளது தமது குரல் இல்லை என்றும்,எடிட் செய்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி செல்வம்,நிர்மல் குமார் அமர்வு எச்.ராஜா நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். 
இதையடுத்து,இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜராகி ஹெச்.ராஜா விளக்கமளித்தார்.அப்போது,உணர்ச்சி மிகுதியால் தவறுதலாக பேசி விட்டதாகவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.மேலும் விளக்க மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.இதனையடுத்து ஹெச்.ராஜாவின் மன்னிப்பை ஏற்று வழக்கை முடித்து வைத்தனர்.