October 12, 2018
தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தெரு விளக்குகளுக்கு பதிலாக எல்.இ.டி விளக்குகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட உள்ளது.
கோவையில் 70/250 வாட்ஸ் வரையிலான சோடியம் விளக்குகள், 40 வாட்ஸ் சி.எப்.எல்., மற்றும் டி 5 என 70 ஆயிரத்துக்கும் அதிகமான தெரு விளக்குகள் உள்ளன. இதனால் வருடத்துக்கு 19 கோடி ரூபாய் மின் கட்டணமும், பராமரிப்புக்காக 6 கோடி செலவாகிறது. இந்த செலவுகளை குறைக்கவும் மின்சாரத்தை சேமிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
எல்.இ.டி.,விளக்குகள் பொருத்தப்பட்டால் 47.81 சதவீதம் வரை மின்சாரம் சேமிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் கணக்கிட்டுள்ளது. இந்த மதிப்பீடு ஸ்மார்ட் சிட்டி நிர்வாகக்குழுவின் ஒப்புதலுக்கு மாநகராட்சி அனுப்பி வைத்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியில் மாநகராட்சிப்பகுதியான 60 வார்டுகள் மற்றும் விரிவாக்கப்பகுதியில் உள்ள தெரு விளக்குகளை எல்.இ.டி., விளக்குகளாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கோவைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 56 ஆயிரத்து 984 எல்.இ.டி., விளக்குகளைப் பொருத்த 74 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒப்புதல் கிடைத்ததும் டெண்டர் விடப்பட்டு விளக்குகள் மாற்றப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.