October 12, 2018
தண்டோரா குழு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை முறைகேடாக உறவினர்களுக்கு வழங்கியதாக முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில்,திமுக.,வின் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்தார்.பின்,உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,முதலமைச்சரின் உறவினர் சுப்ரமணியம் என்பவர் பங்குதாரராக உள்ள வெங்கடாஜலபதி அன்ட் கோ என்ற நிறுவனத்துக்கு 3,120 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதையடுத்து,இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்க உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் முறையாக விசாரிக்காததால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதி ஜகதீஷ்சந்திரா உத்தரவிட்டுள்ளார்.மேலும்,வழக்கு ஆவணங்களை,ஒரு வாரத்தில் சிபிஐயிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒப்படைக்க வேண்டும்.ஆரம்ப கட்ட விசாரணையை 3 மாதத்தில் சிபிஐ முடிக்க வேண்டும். இதில் முகாந்திரம் இருந்தால் முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.