October 12, 2018
தண்டோரா குழு
கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்தது தொடர்பாக பேராசிரியர் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பெயரும் அவ்வப்போது கூறப்பட்டு வந்தது.இதற்கிடையில் நக்கீரன் வார இதழில் நிர்மலா தேவி ஆளுநரை 4 முறை சந்தித்ததாக கட்டுரை வெளியிட்டது.இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த புகாரையடுத்து நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில்,பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்,
நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அச்சுறுத்தல்கள் விடுப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது.நிர்மலா தேவியுடன் ஆளுநர் மற்றும் ராஜ்பவனை தொடர்புபடுத்தி வெளியாகும் தகவல்கள் முழுக்க முழுக்க பொய்யானவை.போலீஸ் விசாரணையின் போது நிர்மலா தேவி கொடுத்துள்ள வாக்குமூலத்தின் மூலம் உண்மை வெளியாகும்.தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநர் குறித்து தொடர்ச்சியாக அநாகரீகமாகவும்,ஆபாசமாகவும் செய்திகள் வெளியிடப்படுகின்றன.நீண்ட நாட்கள் பொறுமை காத்த நிலையிலும் அவதூறு தொடர்ந்த காரணத்தினால் புகார் அளிக்கப்பட்டது.செப்டம்பரில் நக்கீரன் இதழில் வெளியான கட்டுரை மஞ்சள் பத்திரிகையில் இடம்பெறும் கட்டுரைகளுக்கு ஒப்பானது.கடந்த ஒரு வருடமாக நிர்மலா தேவி ஒரு போதும் ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்தது இல்லை கடந்த ஒரு வருடத்தில் ஆளுநரை ஒரு போதும் நிர்மலா தேவி சந்தித்தது இல்லை என கூறப்பட்டுள்ளது.