October 11, 2018
தண்டோரா குழு
நவம்பர் 1ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
“தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு நவம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது.தீபாவளிக்கு சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும். சென்னையில் கோயம்பேடு,தாம்பரம்,மாதவரம்,பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படும்,மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
நவம்பர் 1-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெறும்.சூழ்நிலைக்கு ஏற்ப நாடு முழுவதும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.ஆம்னி பேருந்துகளுக்கு இன்னும் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.விரைவில் 100 மின்சார பேருந்துகள் வாங்கப்படும்.இவற்றில் சென்னையில் 80-ம்,கோவையில் 20-ம் இயக்கப்படும்.போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நிலுவைத்தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது”.இவ்வாறு பேசினார்.