October 10, 2018
தண்டோரா குழு
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை எதிர்த்தும்,தமிழில் தேர்வெழுத அனுமதிக்க கோரியும் போராடிய மாணவர்கள் மீது நேற்று போலீசார் தடியடி நடத்தியதற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் இயங்கி வரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு கீழ் நெல்லை,கன்னியாகுமாரி,தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 80க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.இக்கல்லூரிகளில் வருகைப்பதிவு குறைவான மாணவர்களுக்கு அபராதம் வசூலிப்பது வழக்கம். ஆனால் சமீபத்தில் வருகை பதிவு குறைவான மாணவர்களுக்கான அபராத கட்டணத்தை பல்கலைக்கழக நிர்வாகம் உயர்த்தியது.
இக்கட்டணத்தை பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் செலுத்த முடியாது எனவும்,இக்கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.மேலும்,தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.ஆனால் துணைவேந்தர் மாணவர்களின் கோரிக்கையை நிராகரித்தார்.
இதனைக்கண்டித்து மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்து அதனைக் கட்டுபடுத்த போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.இதனைக்கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இச்சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.அதில் “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும்,மாணவர்களுக்குமான கருத்து வேறுபாட்டை,சுமூகமாகத் தீர்த்துவைக்கும் நடவடிக்கைகள் எடுக்காமல்,காவலர்கள் வன்முறையால் கட்டுப்பாடு ஏற்படுத்த நினைத்தது கண்டிக்கத்தக்கது.” என்று பதிவிட்டுள்ளார்.