October 9, 2018
தண்டோரா குழு
‘அரசன்’ படத்திற்காக பெற்ற முன்பணம் ரூ.50 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து தராவிட்டால் நடிகர் சிம்புவின் உடைமைகளை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு பேஸ்சன் மூவி மேக்கர்ஸ் என்ற சினிமா படத்தயாரிப்பு நிறுவனம்,நடிகர் சிம்பு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தது.அதில்,நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து ‘அரசன்’ படத்தை தயாரிக்க திட்டமிட்டதாகவும்,இதற்காக அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசி, முன்பணமாக ரூ.50 லட்சத்தை கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி வழங்கியதாகவும் கூறியிருந்தனர்.ஆனால்,தங்களுடன் செய்து ஒப்பந்தப்படி நடிகர் சிம்பு ‘அரசன்’ படத்தில் நடிக்க முன்வராமல் இழுத்தடித்தாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதனால்,தங்கள் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,தங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர சட்டப்படி உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதையடுத்து,இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்த ராஜ் ஏறகனவே 4 வாரம் அவகாசம் வழங்கியிருந்தார்.எனினும் சிம்பு தரப்பில் இருந்து இன்னும் பணம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில்,85 லட்சம் ரூபாயை வட்டியுடன் அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.அப்படி செலுத்த தவறினால் சிம்புவுக்கு சொந்தமான கார்,மொபைல், பிரிட்ஜ்,ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் ஜப்தி செய்ய வேண்டும் என உத்திரவிட்டுள்ளார்.