October 9, 2018
தண்டோரா குழு
கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக நின்ற நீதிமன்றத்தை வணங்குகிறேன் என்று விடுதலையான நக்கீரன் கோபால் தெரிவித்துள்ளார்.
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக,ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் இன்று கைது செய்யப்பட்டார்.இதையடுத்து விசாரணைக்காக அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
அப்போது,நக்கீரன் கோபால் சார்பாக அவரது வழக்கறிஞர் பி.டி பெருமாள்,அரசுத் தரப்பு வழக்கறிஞரும் ஆஜராகி வாதிட்டனர்.இதையடுத்து,இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கோபிநாத்,124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதில் முகாந்திரம் இல்லை என்றும்,124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்தது செல்லாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும்,ஆளுனரை மிரட்டும் வகையில் நக்கீரன் கட்டுரையில் கோபால் எதுவும் எழுதவில்லை என்று கூறிய நீதிபதி,கோபாலை சிறையில் அடைக்க வேண்டும் என்ற வாதத்தை நிராகரித்து,அவரை நீதிமன்ற காவலில் அனுப்ப முடியாது என்றுக் கூறி அவரை விடுதலை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்கீரன் கோபால்,
“கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக நீதித்துறை செயல்பட்டுள்ளது.திறமையாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும்,இந்து என். ராமுக்கும் நன்றி.ராஜ்பவன் பற்றிய செய்தியை புலனாய்வு செய்து நக்கீரனில் வெளியிட்டோம்.ஸ்டாலின்,துரைமுருகன்,திருமாவளவன்,முத்தரசன் உள்ளிட்டோர் என்னை சந்தித்தது எனக்கு பக்கபலமாக இருந்தது.கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக நின்ற நீதிமன்றத்தை வணங்குகிறேன் எனக் கூறியுள்ளார்.