October 9, 2018
தண்டோரா குழு
பாஜகவுக்கு ஒரு நீதி; அதனை எதிர்க்கும் மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதியா? இதனை கடுமையாக கண்டிக்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக,ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் இன்று கைது செய்யப்பட்டார்.இதையடுத்து,நக்கீரன் கோபாலுக்கு மருத்துவ பரிசோதனை நடக்கும் திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு வந்த மு.க.ஸ்டாலின் அவரை சந்தித்தார்.பின்னர் மருத்துவமனை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
“நக்கீரன் கோபால் கைது சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமோ என்ற சந்தேகம் எழுப்புகிறது.பாஜகவுக்கு ஒரு நீதி; அதனை எதிர்க்கும் மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதியா? இதனை கடுமையாக கண்டிக்கிறேன்”. இவ்வாறு பேசினார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
“பொதுநலனில் கொண்டுள்ள அக்கறையினால் பல்வேறு பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து வெளிப்படுத்துவதில் தணியாத ஆர்வமுடன் செயலாற்றி வரும் மூத்த பத்திரிகையாளரும்,நக்கீரன் இதழின் ஆசிரியருமான நக்கீரன் கோபாலை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் அதிமுக அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.என்று தெரிவித்துள்ளார்.