October 9, 2018
தண்டோரா குழு
நக்கீரன் கோபாலை சந்திக்க காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் தர்ணாவில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார்.
ஆளுநரை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் போலீசாரல் இன்று கைது செய்யப்பட்டார்.
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக,ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் மீது சென்னை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் சட்டப்பிரிவு 124 -ன் கீழ் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் பணியை செய்ய விடாமல் உள்நோக்குடன் செயல்படுதல் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலிடம் சிந்தாதிரிபேட்டை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,நக்கீரன் கோபாலை சந்திப்பதற்கு இன்று காலை 11 மணியளவில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வருகை தந்தார்.
ஆனால்,நக்கீரன் கோபாலை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்து விட்டதால் வைகோ சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனை அடுத்து வைகோவை காவல்துறையினர் கைது செய்தனர்.