October 6, 2018
தண்டோரா குழு
உலக அரிமா சங்க சேவை வாரத்தையொட்டி கோவையில் கண்தான விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது.
உலக சேவை வாரம் கடந்த 2-ம் தேதி தொடங்கி வரும் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்ட அரிமா சங்கம் சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது. இப்பேரணியை போக்குவரத்து உதவி ஆணையர் சுஜித்குமார் தொடங்கி வைத்தார். இதில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பந்தய சாலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்றனர்.
பின்னர், அரிமா சங்க மாவட்ட ஆளுநர் ஆறுமுகம் பேசியதாவது:-
ஒரு வருடத்திற்கு 1.52 லட்ச கருவிழிகள் தேவைப்படும் நிலையில், தற்போது 25 முதல் 30 ஆயிரம் வரை மட்டுமே கிடைக்க பெருவதாகவும். இதற்கு போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாது தான் காரணம் என்றும் ,ஒருவர் மரணமடையும் போது தங்களது கண்களை தானமாகக் கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும். மேலும், உலக அளவில் கண் தானம் செய்வதில் இலங்கை முதலிடத்தில் இருக்கிறது, என்றார்.
இதில் அன்னை வேளாங்கண்ணி பள்ளியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரிமா சங்க துணைநிலை ஆளுநர் வெங்கிட சுப்ரமணியம், மாவட்ட தலைவர் சண்முக சுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.