October 6, 2018
தண்டோரா குழு
இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த படம் 96. நந்தகோபால் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 96 படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய விஜய்சேதுபதி,
நல்ல படங்களை தேர்ந்தெடுத்து பார்க்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நன்றி. “‘96’ பட வெளியீட்டுக்கு முன்பு பிரச்னை இருந்தது. இங்கு வியாபாரம் என்பது ஒருவரைச் சார்ந்து இல்லை. இன்றுவரை தயாரிப்பாளர்கள் சரியான வசூல் நிலவரம் இல்லை என்கிறார்கள். அது எப்படி சரி பண்ணுவது என்றே தெரியவில்லை. புதிதாக வருபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.யாரைப் போய் பார்க்க வேண்டும் என்று சொல்லுங்கள். அன்று இரவு நந்தகோபால் பட்ட கஷ்டத்தை நான் பார்த்தேன். இதுபோன்ற கஷ்டங்களை கடந்து வந்தவன் நான். யார் மேல் எவ்வளவு பாரம் வைக்கிறார்களோ அதை தாண்டி கடந்து செல்கிறவர்கள் தான் அடுத்தகட்டத்துக்கு போகிறார்கள். எனக்கும் எனது டீமுக்கும் இது முதல் முறை அல்ல. சினிமாவில் காலம்காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சிறுபடத் தயாரிப்பாளர்கள், பெரிய படத் தயாரிப்பாளர்கள் என்று இல்லை. நல்ல படம் வந்து சேரணும் என்று வேலை செய்கிறோம். அது சரியாக வெளியாகி, போட்ட பணம் வந்து சேர்ந்தால் போதும். ஆனால், அதற்குள் நிறைய பிரச்சினைகள் உள்ளன. தீர்வு இல்லாத பிரச்சினையை வெளியே பேசி என்னவாகப் போகிறது. அனைத்து பிரச்சினைகளையும் பேசி, எப்படி முடிவு கிடைக்கும். யார் கொடுப்பார்கள்? அதேபோல் விஷால் நல்ல மனிதர். அவருக்கும் இந்த பிரச்னைக்கும் சம்பந்தமுமில்லை. முன்னால் இருப்பதினால் இவர்தான் பிரச்னை என்று நினைக்கிறோம். மற்றவர்களின் பிரச்னைகளை வெளியில் தான் பார்க்கிறோம். எல்லா மனிதனுக்கும் இருக்கும் இயல்பான குணம்தான். விஷால் எவ்வளவு வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார், கஷ்டத்தில் இருக்கிறார் என்பது யாருக்கு தெரியும். விஷால் செய்தது எனக்கு தவறாகவே தெரியவில்லை. அது அவருடைய நிலைமை. ஒவ்வொரு முறையும் பணத்தை விட்டுக் கொடுக்கும்போது இவ்வளவு பணம் கொடுத்தேன் என்று பத்திரிகையாளர் சந்திப்பு வைத்தால் சொல்ல முடியும். இப்போது கொடுத்த பணத்தையும் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.
வெளியில் தெரிவது 5 சதவிகதம் மட்டும் தான். 95 சதவிகிதம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும். இதற்கு முன்னால் சீமராஜாவுக்க்காக சிவகார்த்திகேயனுக்கு என்ன நடந்தது , விமலுக்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும். அதற்காக பைனான்சியரை குற்றம் சொல்லவில்லை. அவர்களுக்கு பணம் தான் அடையாளம். அவர்கள் அதை தக்கவைக்க அந்த நேரத்தில் போராடுகிறார்கள். எனக்கு எனது படம் தான் அடையாளம். இங்கு வியாபாரம் என்பது ஒருவரை சார்ந்தது அல்ல” எங்களைச் சார்ந்து இருக்கும் உங்களால் எப்படி தீர்வு கொடுக்க இயலும். அனைவருமே இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று போராடுகிறார்கள். ஆனால், முடியவில்லை. பட வெளியீட்டில் பிரச்சினை இருக்கிறது என்றுதான் சொல்ல முடியும். அதற்கு என்ன தீர்வு என்று என்னை கேட்கக் கூடாது”.
இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.