October 5, 2018
தண்டோரா குழு
பெட்ரோல் டீசல் விலையை பன்மடங்கு உயர்த்தி மக்களை வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்து கோவையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனைக்கண்டித்தும் மத்திய அரசு உடனடியாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப்பெற கோரியும் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்பாட்டங்கள் இன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பாமக சார்பில் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பாக மாநில துணை பொது செயலாளர் ரகுபதி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தி மக்களை மிகுந்த சிரமத்திற்கு தள்ளிய மத்திய அரசு மற்றும் வரிகளை குறைக்காத மாநில அரசை கண்டித்தும் கண்டன பதாகைகளை ஏந்திய வண்ணம் கண்டன கோசங்கள் எழுப்பிய பாமகவினர் பெட்ரோல்,டீசல் விலையினை குறைக்க தவறிய மத்திய அரசு பதவி விலக வேண்டும் என்றும், இதனைக்கண்டு கொள்ளாத பினாமி எடப்பாடி அரசை கண்டித்தும் கோசங்கள் எழுப்பினர். இப்போராட்டத்தில் மாநில துணை பொதுசெயலாளர் விசாலாட்சி, மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செயலாளர் கிஷோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இதில் இளைஞர் அணி சார்பில் பாமக இளைஞர் அணியின் மாநில துணை செயலாளர் அசோக்ஸ்ரீநிதி தலைமையில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்டோர் மத்திய மாநில அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர். உடனடியாக மத்திய அரசு மக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான பெட்ரோல் டீசல் விலை திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுருத்தினர்.
இதேபோல் கோவை புறநகர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சம்பத் தலைமையில் கருமத்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி நாள்தோறும் மக்களை வாட்டி வரும் மத்திய மாநில அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து கண்டன உரை நடைபெற்றது. சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.