October 5, 2018 
தண்டோரா குழு
                                பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன் இணைவது தற்கொலைக்கு சமம் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுகவிலிருந்து டிடிவி தினகரன் ஒதுக்கப்பட்டவுடன் தனியாக பிரிந்து அமமுக கட்சி ஆரம்பித்து அதிமுகவுக்கு  சவாலாக விளங்கிவருகிறார். இந்நிலையில் டிடிவி தினாகரனை ஓபிஎஸ் சந்தித்தார் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ் செல்வன் கூறியுள்ள கருத்து பெரும் பரபரப்பை  கிளப்பியுள்ளது.
இந்நிலையில் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது தான் ஒரே குறிக்கோள்.திகார் சிறையில் இருந்து விடுதலையான என்னை ஓபிஎஸ், 2017 ஜூலை மாதம் சந்தித்தார்!  2017 ஜூலை 12ல் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோளின்படி, அவரை சந்தித்தேன் . எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தது தவறு என சந்திப்பின்போது ஓபிஎஸ் கூறினார். முதல்வர் பழனிசாமியை  பதவியில் இருந்து இறக்க தயாராக இருப்பதாக கூறினார். எங்கள் சந்திப்பில் சில ரகசியங்கள் இருப்பதால், அதனை ஓபிஎஸ் மறுக்க மாட்டார். எனக்கு முக்கிய பதவி கொடுப்பதாக ஓபிஎஸ் மீண்டும் சந்திக்கலாம் என்று கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கேட்டார்.
ஓபிஎஸ் எங்கள் சிலீப்பர் செல் இல்லை . எங்கள் குடும்பம் வேண்டாம் என கூறிக்கொண்டே  என்னை சந்திக்க ஓபிஎஸ் முயற்சித்தார். பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன் இணைவது தற்கொலைக்கு சமம் என்றார்.
மேலும் முதலமைச்சரை  மாற்ற வேண்டும் என்ற கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை மத்திய அரசே தமிழக அரசை தாங்கிப் பிடித்து வருகிறது  இவ்வாறு அவர் கூறினார்.