October 4, 2018
தண்டோரா குழு
வீடு மற்றும் விருந்து நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவு பொருட்களை சேகரித்து பசியில் உள்ளவர்களுக்கு தேடி வழங்கும் திட்டம் கேட்டரிங் உரிமையாளர் சங்கம் சார்பில் கோவையில் துவங்கப்பட்டுள்ளது.
கேட்டரிங் உரிமையாளர்கள் சங்க இரண்டாமாண்டு துவக்க விழா கோவை ராம்நகர் பகுதியில் நடைபெற்றது. விழாவில் அதன் தலைவர் மாதம்பட்டி நாகராஜ், செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் உணவு கிடைக்காமல் அல்லல் படுவோர் இருக்கும் நிலையில் அன்றாடம் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளில் ஏராளமான உணவு பொருட்கள் மிகுதியாகி வீணாவதாகவும் அது போன்ற உணவுகளை கேட்டரிங் ஊழியர்கள் வீணாக்காமல் அதனை சேகரிக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்பட்டது. மேலும் சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி காப்பதில் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
முன்னதாக மிகுதியாகும் உணவு பொருட்களை சேகரித்து உணவின்றி தவிப்போற்கு அதனை வழங்கும் வகையில் “ஈதல்” எனும் புதிய திட்டம் அவ்வமைப்பால் துவங்கப்பட்டது. அதனடிப்படையில் புதிய வாகனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு அதன் மூலம் உணவு பொருட்கள் சேகரிக்கப்படும் என தெரிவித்த அதன் தலைவர் மாதம்பட்டி நாகராஜ், இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனவும் பொதுமக்களின் ஆதரவை பொறுத்து கூடுதல் வாகனங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.