October 3, 2018
தண்டோரா குழு
கேரளா சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை எனவும், பெண் பக்தர்கள் வந்து செல்வதற்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், 10 முதல் 55 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து,இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை ஆரம்பத்தில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இவ்வழக்கின் விசாரணை முடிந்து தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் நீதிபதி மல்ஹோத்ராவை தவிர 4 நீதிபதிகள் ஒருமித்து இந்த தீர்ப்பை அளித்துள்ளனர். தீபக் மிஸ்ரா,சந்திரசூட்,கன்வில்கர்,நரிமன் ஆகிய நீதிபதிகளைத் தவிர நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இந்த தீர்ப்பில், சபரிமலையில் அனைத்துப் பெண்களையும் அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. உடல் மற்றும் உளவியல் ரீதியை காரணம் காட்டி பெண்களின் உரிமையை பறிக்கக்கூடாது. பெண்களை கடவுகளாக வழிபடும் நாட்டில் சில கோயில்களில் தடை விதிப்பது சரியல்ல.ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இந்துகள்.தெய்வ வழிபாட்டில் பாரபட்சம் கூடாது.கடவுளை வணங்குவதில் ஆண் – பெண் என்ற பாகுபாடு இருக்க கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும்,வழிபாடு என்பது ஆண் – பெண் இருவருக்கும் சமமானது என்று கூறி 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல தேவஸ்தானம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது.
இந்த தீர்ப்புக்கு எதிப்பு தெரிவிக்கும் வகையில் ஏராளமான பெண்கள் நாங்கள் 50 வயது வரை காத்திருக்க தயார் எனக் கூறி தங்களது எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றனர். மேலும் தீர்ப்பை எதிர்த்து பந்தளத்தில் நேற்று ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்நிலையில் இதுதொடர்பாக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
‘‘சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை. தீர்ப்பை முழு மனதுடன் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். சபரிமலை கோயிலுக்கு செல்லும் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோலவே சபரிமலை கோயிலுக்கு பெண்கள் வந்து செல்ல தேவையான வசதிகள் செய்துத்தரப்படும். இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்துக்கு ஏற்கெனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன’’என்று கூறினார்.