October 2, 2018
தண்டோரா குழு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி தமிழகம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் என தொடர் போராட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா,
“வணிகர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் துறை சார்ந்த அமைச்சர்களிடம் பலமுறை முறையிட்டும்,நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து வணிகர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதால் இந்த தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிகர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற,வால்மார்ட் நிறுவனத்தை இந்தியாவில் கால்பதிக்க கூடாது என்பதற்காக இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
மேலும்,பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும்.கேரி பெக்,பிளாஸ்டிக் தடை செய்ய வேண்டும் என்ற உத்தரவில் மறுசுழற்சி செய்யக்கூடியவையை அனுமதிக்க வேண்டும்.
வணிகத்தை விட்டு வெளியே செல்லக்கூடிய நிலைக்கு தள்ளியுள்ள உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 23ஆம் தேதி தமிழகம் தழுவிய உண்ணாவிரத போராட்டமும்,டிசம்பர் 16ல் அனைத்து மாநில வணிகர்கள் சங்கம் சார்பில் டெல்லியில் பேரணியும் நடத்தவுள்ளதாக கூறினார்.
மேலும்,தொடர்ந்து அந்நிய நாட்டிற்கு ஆதரவாக மத்திய,மாநில அரசுகள் செயல்படுவதை நிறுத்தாவிட்டால் டிசம்பர் இறுதியில் தென் மண்டல அளவில் 9 மாநிலங்கள் பங்கேற்கும் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக தெரிவித்தார்.
உள்நாட்டு குளிர்பானத்திற்கு அனுமதி தரமால் அரசு இருப்பதால் தான் அந்நிய குளிர்பானம் தொடர்ந்து சந்தையில் இருப்பதாக கூறியவர்,மிக விரைவில் இந்த நிலை மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்”.இவ்வாறு பேசினார்.