October 1, 2018
தண்டோரா குழு
கோவையில் தாழ்த்தப்பட்ட பெண்ணின் இறப்புக்கு காரணமான காதலன் ஆசிப்,தோழி கல்பனா மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் விடுதலை முன்னணியினர் இன்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் அளித்தனர்.
கோவை வீரபாண்டி அறிவொளி நகரைச் சேர்ந்த சிவக்குமாரின் மகள் சந்தியா.இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.அப்போது கோத்தகிரியைச் சேர்ந்த ஆசிப் என்பவரை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.இருவீட்டாரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து சந்தியாவின் தோழி கல்பனாவின் வீட்டில் வைத்து ஆசிப்பை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாததால்,சந்தியாவின் பெற்றோர்கள் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் கடந்த ஜீன் 16ம் தேதி புகார் அளித்தனர்.
இதனையடுத்து காரமடை காவல்துறையினர் மேட்டுப்பாளையம் நெல்லித்துரை அருகே சந்தியாவின் பிரேதத்தை கண்டுபிடித்துள்ளனர்.சந்தியாவின் கொலையில் சந்தேகம் இருப்பதால்,அவரது காதலன் ஆசிப் மற்றும் கல்பனாவிடம் உரிய விசாரணை நடத்தி கொலையாளிகளை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.