September 29, 2018
தண்டோரா குழு
கோவையில் கனரா வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருட ஸ்கிம்மர் இயந்திரம் பொருத்தப்பட்டது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சரவணம்பட்டி விசுவாசபுரம் பகுதியில் உள்ள கனரா வங்கியின் அருகிலேயே அந்த வங்கிக்கான ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க கனரா வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வந்த போது, ஏ.டி.எம். இயந்திரத்தில் கார்டு சொருகும் பகுதி வித்தியாசமாக இருந்ததால் உடனடியாக கனரா வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், கனரா வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். மையத்திற்கு வந்து ஆய்வு செய்த போது, வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடுவதற்காக வைக்கப்படும் ஸ்கிம்மர் இயந்திரம் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர், வங்கி அதிகாரிகள் உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்குப் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக சரவணம்பட்டி காவல்துறையினர் சைபர் கிரைம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, ஏ.டி.எம். மையத்தில் பதிவாகியுள்ள சி.சி.டி.வி., காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.