September 28, 2018
தண்டோரா குழு
சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள்,10 முதல் 55 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து,இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கை ஆரம்பத்தில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது.பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி,5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில் இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.முக்கியத்துவம் வாய்ந்த இந்த இவ்வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் நீதிபதி மல்ஹோத்ராவை தவிர 4 நீதிபதிகள் ஒருமித்து இந்த தீர்ப்பை அளித்துள்ளனர்.தீபக் மிஸ்ரா,சந்திரசூட்,கன்வில்கர்,நரிமன் ஆகிய நீதிபதிகளைத் தவிர நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
வரலாற்றுச்சிறப்பு மிக்க இத்தீர்ப்பை பற்றி தமிழக தலைவர்களின் கருத்துக்கள்:
மு.க.ஸ்டாலின்: சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்’ என்பதை நிரூபிக்கும் வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது.சமூக நீதி-பாலின சமத்துவம்-பெண் விடுதலை ஆகிய உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் இத்தீர்ப்பு மைல்கல்
திருமாவளவன்: சபரிமலையில் பெண்கள் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதிகளுக்கு பாராட்டுகள் வழிபடும் உரிமைகள் மட்டுமின்றி அர்ச்சனை செய்வதிலும் பெண்களுக்கு இருக்கும் தடைகள் நீங்க வேண்டும்.
கனிமொழி எம்.பி: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது நாடாளுமன்றம்,சட்டமன்றம் இதை பின்பற்றி பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் என நம்புகிறேன்.
குஷ்பு: சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. பெண்களுக்கு சம உரிமை உள்ளது என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு பிரதிபலித்துள்ளது.
கமல்ஹாசன்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல வேண்டும் என யார் விரும்பினாலும் அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.அந்தக் கோவிலுக்கு நான் இதுவரை சென்றதில்லை.ஆனால்,கோவிலுக்குள் செல்ல வேண்டும் என யார் விரும்பினாலும் அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.அது தான் கடவுள் தன்மை என நினைக்கிறேன் என்றார்
மதுரை ஆதீனம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு பெண்களுக்கு பெருமை சேர்த்துள்ளதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.கேரள அரசும்,தேவசம் போர்டும் தீர்ப்பை ஏற்க வேண்டும்,பெண்களை அனுமதித்தால் கோவிலின் புனித தன்மை கெடாது என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.