September 28, 2018
தண்டோரா குழு
சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள்,10 முதல் 55 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து,இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கை ஆரம்பத்தில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது.பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி,5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.அப்போது, சபரிமலையில் ஐயப்ப சாமியை தரிசனம் செய்ய பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன.10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களால் 48 நாட்கள் விரதமிருக்க முடியாது என்பதால்,அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் படுவல்லை எனக் கூறி தேவசம் போர்டு வழக்கறிஞர் வாதிட்டார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இவ்வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் நீதிபதி மல்ஹோத்ராவை தவிர 4 நீதிபதிகள் ஒருமித்து இந்த தீர்ப்பை அளித்துள்ளனர்.தீபக் மிஸ்ரா,சந்திரசூட்,கன்வில்கர்,நரிமன் ஆகிய நீதிபதிகளைத் தவிர நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
சபரிமலையில் அனைத்துப் பெண்களையும் அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.உடல் மற்றும் உளவியல் ரீதியை காரணம் காட்டி பெண்களின் உரிமையை பறிக்கக்கூடாது.பெண்களை கடவுகளாக வழிபடும் நாட்டில் சில கோயில்களில் தடை விதிப்பது சரியல்ல.ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இந்துகள்.தெய்வ வழிபாட்டில் பாரபட்சம் கூடாது.கடவுளை வணங்குவதில் ஆண் – பெண் என்ற பாகுபாடு இருக்க கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும்,வழிபாடு என்பது ஆண் – பெண் இருவருக்கும் சமமானது என்று கூறி 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல தேவஸ்தானம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது.
எனினும்,மத வழிபாட்டு உரிமைகளை நீதிமன்றம் முடிவு செய்யக்கூடாது என்று நீதிபதி இந்து மல்ஹோத்ரா தெரிவித்து உள்ளார்.பக்தர்கள் தான் வழிபாட்டு முறைகளை முடிவு செய்ய வேண்டும்,சம உரிமை அடிப்படையில் மத பழக்க வழக்கங்களை சோதிக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்லாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நாட்டில் பல்வேறு இடங்களில் பெண்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.