August 29, 2018
த.விக்னேஷ்
விநாயகர் சதுர்த்தி பண்டிகை அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி கொண்டாடப்படுகிறது.தமிழகம் முழுவதும் பொது இடங்களில் இந்து அமைப்புகள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் விநாயகர் சிலைகளை அமைத்து வழிபாடு நடத்தி,பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல்,ஆறு போன்ற நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இதனைதொடர்ந்து,கடந்த பல ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தியில் பயன்படுத்தி வந்த பல்வேறு அமில மூலப்பொருட்களை(பிளாஸ்டர் ஆப் பாரீஸ்),பெயிண்ட் போன்றவற்றை பயன்படுத்தி சிலைகள் தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியத்தால் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களை பயன்படுத்த கூடாது,சிலைக்கு வர்ணம் தீட்ட வேண்டும் என்றால் ரசாயன கலப்பு இல்லாத இயற்கை சாயங்களை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து விநாயகர் சிலை தயாரிப்பில் கலைஞர்கள் பல்வேறு புதிய யுக்திகளை கண்டுபிடித்துள்ளனர்.அந்த வகையில் இயற்கை முறையில் விதைவிநாயகர் சிலையை வடிவமைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இயற்கை முறையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் கோவையைச் சேர்ந்த ராம்மோகன் கூறுகையில்,
“இந்த ஆண்டு புதிய பயோ(bio)முறையில் நச்சுத்தன்மை அற்ற முழுவதும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பல்வேறு விதை மற்றும் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தான் புதிய அவதாரம் எடுத்துள்ளது.
கடந்த சில வருடங்களாக விநாயகர் சதுர்த்திக்காக செய்யப்படும் விநாயகர் சிலைகள் பல்வேறு நச்சுத்தன்மை கொண்ட அமிலங்களால் செய்யப்படுவதால் அப்படிப்பட்ட விநாயகர் சிலைகள் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறி தமிழக அரசு அதற்கு தடை விதித்தது.
இதனால் நாங்கள் சுற்றுசூழலுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத முழுவதும் பயோ(bio)முறையில் தயாரிக்கப்பட்ட “விதை விநாயகர்” சிலையை செய்ய நாங்கள் முடிவு செய்தோம்.
அதன்படி களிமண் மற்றும் வேப்பம் விதை,துளசி விதை,வெண்டை விதை மற்றும் அரச விதை போன்ற பல்வேறு விதைகளால் விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுகிறது.களிமண் பற்றாக்குறை காரணமாக காங்கேயம் மற்றும் மதுரை சுற்று வட்டாரப்பகுதிகளில் இந்த விநாயகர் சிலைகளை நாங்கள் தயாரிக்கிறோம்.
இவ்வகை விதை விநாயகர் 7 முதல் 11 அங்குலம் வரை பல்வேறு அளவுகளில் வெள்ளை,சிகப்பு மற்றும் மஞ்சள் நிறங்களிலும் கிடைக்கிறது.வெள்ளை நிறத்திற்கு சுண்ணாம்பு மற்றும் திறுநீறும்,சிகப்பு நிறத்திற்கு குங்குமமும்,மஞ்சள் நிறத்திற்கு மஞ்சளும் பயன்படுத்தப்படுகிறது.
சிறிது அமில கலப்பு இல்லாமல் முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால் மக்கள் மத்தியிலும் தன்னார்வலர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இவ்வகை விநாயகர் சிலைகளை வீட்டு தொட்டிகளில் கரைக்கும் பொழுது அது கரைந்த பின்பு செடியாக வளர ஆரம்பிக்கிறது.நீர்நிலைகளில் கரைக்கும் போது உயிரினங்களுக்கு இரையாகவும் இருக்கிறது.சுற்றுசூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத இவ்வகை விநாயகர் சிலைகள் இந்த வருடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது”.இவ்வாறு அவர் கூறினார்.