August 28, 2018
தண்டோரா குழு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.7 கோடி நிதியுதவி அளிப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. தற்போது வெள்ளம் வடிய துவங்கி விட்ட நிலையில் நிவாரண முகாம்களிலிருந்து மக்கள் வீடு திரும்பி வருகின்றனர்.
இதற்கிடையில்,கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுக்கு 392 பேர் பலி, 33 பேரை காணவில்லை.வெள்ளம், நிலச்சரிவால் 1,722 வீடுகள் முழுமையாக சேதம், 20,945 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளது என கேரள உள்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, கேரளாவை மறுசீரமைக்கப்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் உலகம் முழுவதும் வாழும் மக்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.இதையடுத்து, கேரள வெள்ள நிவாரணத்திற்கு உலக நாடுகள், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள், திரையுலகினர் என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.7 கோடி நிதியுதவி அளிப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது
இது குறித்து இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவுக்கான கூகுள் நிறுவனத்தின் துணை தலைவர் ராஜன் ஆனந்தன் கூறுகையில்,
கேரள வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிக்காக ஒரு மில்லியன் அதாவது சுமார் 7 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். கூகுள் கிரிசிஸ் ரெஸ்பான்பான்ஸ் குழு சார்பில் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவாதகவும் கூறியுள்ளார்.
இதற்கு முன் ஆப்பிள் நிறுவனம் கேரளாவுக்காக 7 கோடி ரூபாய் நிதியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.