August 28, 2018
தண்டோரா குழு
தனது தந்தையின் மரணத்திற்காகக் கூட ஸ்டாலினை அழ விடவில்லை இந்த அதிமுக அரசு என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததைடுத்து அக்கட்சியில் தலைவர் பதவி காலியானது.இதனையடுத்து, தலைவர் பதவிக்கு ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் 2வது தலைவராக முக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொதுச்செயலாளர் அன்பழகனால் வெளியிடபட்டது. அதைப்போல் பொருளாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலினை வாழ்த்தி திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசினார்.
அப்போது பேசிய அவர்,
கிழக்கு சூரியனாக உதித்துள்ள அண்ணன் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.திமுகவின் வழி நடத்தக் கூடியவராக ஸ்டாலினுக்கு மட்டுமே தகுதி என்பதில் சந்தேகம் இல்லை. யாருக்கும் இதில் எந்த சந்தேகமும் இருந்ததில்லை தலைவர் பதவி பொறுப்பை ஸ்டாலின் ஏற்றிருப்பது சடங்குதான். கட்சியின் சட்டங்கள் கேட்ககக் கூடிய நிகழ்வு. மனதில் முகத்தில் புன்னகையை புகட்டக்கூடிய வாய்ப்பை இந்த நாள் கொடுத்திருக்கிறது.இவர் என் தலைவர், இவரைப் பெற்றிருப்பதற்கு எத்தனை பேறு பெற்றிருக்கிறேன் என்று நெகிழ்கிறேன்.
எங்கள் அப்பாவிற்கு ஒரே ஒரு ஆசைதான் இருந்தது. தன் தலைவனிடம் சென்று அருகிலே அடைக்கலம் செய்யப்பட வேண்டும் என்பதே அந்த ஆசை. அந்த ஆசையை நிறைவேற்ற முடியுமா என்ற கவலை மட்டுமே ஸ்டாலினுக்கு இருந்தது. எத்தனையோ பேரைத் தொடர்பு கொண்டு அவர் பேசினார்.தனது தந்தையின் மரணத்திற்காகக் கூட ஸ்டாலினை அழ விடவில்லை இந்த அதிமுக அரசு.கட்சிக்கு முன் நாம் எதுவும் இல்லை.ஒரு முகமறியா முதல்வர் முன்பு போய் நின்றார் ஸ்டாலின்.பிரதமர்களையெல்லாம் உருவாக்கிய தலைவருக்காக அவர்கள் முன்பு போய் நின்றார்.உங்களால் முடியும் என்று நா தழுதழுக்க கேட்டார் ஸ்டாலின். ஆனால், மெரினாவில் இடமில்லை என்ற அறிக்கை தான் இடியாக வந்தது.தமிழர்களின் மனதில் அது இடியாக இறங்கியது.நாங்கள் அனைவரும் துடித்துப் போனோம். அனைவரும் மெரினாவில் போய் உட்காருவோம் என்றுதான் நாங்கள் சொன்னோம்.ஆனால் ஸ்டாலின் அமைதி காத்தார்.வக்கீல்களோடு கலந்து பேசினார். அடுத்த நாள் சாதகமாக தீர்ப்பு வந்தபோது அங்கேயே உடைந்து அழுதார்.
ஒரு தலைவனாக இன்று நிமிர்ந்து நின்றிருக்கிறீர்கள்.எங்களைப் போல ஸ்டாலின் உணர்ச்சிவசப்படவில்லை.அவர் கோபப்பட்டிருந்தால் தமிழகம் பின்னால் வந்திருக்கும்.இளைஞர் பட்டாளம் ஸ்டாலின் பின்னால் வந்திருக்கும்.ஆனால் எத்தனை பாதிப்பு வந்திருக்கும், துப்பாக்கி சூடு கூட நடந்திருக்கும்.ஆனால் இதையெல்லாம் தவிர்த்து தலைவனாக உயர்ந்து நின்றார் ஸ்டாலின்.உங்களில் ஒருவராக அவரை எழுந்து வா தலைவா என்று கூறி வணங்குகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.