August 27, 2018
தண்டோரா குழு
இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் இருப்பவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இருசக்கர வாகனங்களை ஓட்டுவோரும்,பின்னால் பயணிப்போரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றும்,காரில் செல்வோர் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படவில்லை எனவும் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அதில்,ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மட்டும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்ததாகவும்,பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து,இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பது கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில்,இரு சக்கர வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் இருப்பவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும்,ஹெல்மெட் அணியாவிட்டால் உரிய அபராதம் வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.